ஒரு சிறிய வெளிச்சக் கீற்று..

ஓரு சிறிய வெளிச்சக் கீற்று..
அந்த சிறிய நகரம் பாஸ்டன் நகரில் இருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே, பெரும்பாலும் நடுத்தர மக்கள், கடுமையான உழைப்பாளிகள் ஒரு நெருங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். 1947ஆம் ஆண்டு அந்த ஊரில் உள்ள கப்பல் கட்டுமான தொழிலாளியின் இரண்டு வயது மகனுக்கு ஒரு வகையான கடும் காய்ச்சல் வந்தது. அவனது பெயர் ராபர்ட் சாண்ட்லர். அவனது இரட்டை சகோதரனான மற்றொருவனுடைய உடல் நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதல் காய்ச்சல் பத்து நாட்கள் நீடித்தது. ராபர்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே போனது. அவனது உடல் நிறம் வேகமாக வெளுத்துக் கொண்டே போனது. பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அவன் கொண்டு வரப்பட்டான். அவனது மண்ணீரல் மிகவும் வீங்கிப் போய், ஒரு தண்ணீர் நிரம்பிய பையைப் போல இருந்தன. டாக்டர் ஃபேபருக்கு அவனது வியாதியைக் கண்டுபிடிக்க அவனது ஒரு துளி ரத்தம் போதுமானதாய் இருந்தது. அவனது இரத்தம் முழுவதும் லிம்பாய்டு லுக்கீமியா ப்ளாஸ்ட் எனப்படும் மிகத் தப்பிதமான, முதிர்வடையாத கேன்ஸர் செல்களால் நிரம்பியிருந்தது.
அந்த சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் மருத்துவமனைக்கு வந்த சில வாரங்களிலேயே யெல்லா சுப்பாராவ் அனுப்பிய முதல் மருந்துகள் டாக்டர் ஃபேபருக்கு வந்து சேர்ந்தது. 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி டாக்டர் ஃபேபர் PAA எனப்படும் முதல் ஆண்டி ஃபோலேட் மருந்தை சாண்ட்லருக்கு செலுத்தினார்.
PAA எனப்படும் அந்த மருந்து அச்சிறுவனுக்கு பெரிதாக எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவனது உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. அவனது முதுகுத் தண்டு செயலிழக்கத் துவங்கியது. எல்லா எலும்புகளுக்குள்ளும் புற்றுநோய் கிருமிகள் வேகமாக தாக்கியதால், கால் எலும்புகள் தன்னாலேயே உடையத் தொடங்கின. ராபர்ட் கடும் வலியால் தாளமுடியாத வேதனைக்கு உள்ளானான். வேறு வழியின்றி டிசம்பர் மாதம் எல்லா வகையான மருந்துகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, அச்சிறுவன் தனது மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
டிசம்பர் 28 ஆம் தேதி, டாக்டர் ஃபேபர் தனது நண்பர் யெல்லா சுப்பாராவிடம் இருந்து மேலும ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ஆண்டி ஃபோலேட் மருந்துகளை வரப் பெற்றார். இந்த மருந்தில் அமினோபெட்ரின் எனப்படும் இரசாயனம், PAA வின் அடிப்படை கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. டாக்டர் ஃபேபர், புதிய மருந்தை வெகு வேகமாக ராபர்ட் சாண்ட்லருக்கு செலுத்தினார். அவனது வேதனை சிறிதளவாவது குறையட்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மருந்தின் விளைவுகள் சிரத்தையாக குறிக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டன. செப்டம்பர் மாதம் இரத்தத்தில் பத்தாயிரம் என்னும் அளவுக்கு இருந்த வெள்ளை அணுக்கள், நவம்பரில் இருபதாயிரமாக உயர்ந்திருந்தது. டிசம்பர் மாதத்தில் அதன் அளவு ஏறக்குறைய எழுபதாயிரமாக இருந்தது. புதிய மருந்திற்கு பிறகு அதன் எண்ணிக்கையில் திடீர் என்று ஒரு தேக்கம் உருவானது. ஒரு சில நாட்களில் அந்த எண்ணிக்கை வெகு வேகமாக இறங்கத் துவங்கியது.
ஜனவரி முதல் தேதியன்று, இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதன் உயர்ந்தபட்ச எண்ணிக்கையில் இருந்து ஆறில் ஒரு பங்காக குறைந்திருந்தது. அதாவது, வெள்ளை அணுக்கள் தன் இயல்பான நிலைக்கு வந்து விட்டிருந்தது. மைக்ரோஸ்கோப் வழியாக பார்க்கும்போது கேன்ஸர் அணுக்கள் மாயமாகி விடவில்லை. ஆனால், மிகக் குறைந்த அளவிற்கு வந்து விட்டிருந்தன.
ஜனவரி மாதம் 13ஆம் தேதி, சிறுவன் ராபர்ட் சாண்ட்லர், யாருடைய உதவியுமின்றி, தனியாக நடந்து மருத்துவமனைக்கு வந்தான். அவனது மண்ணீரல் முதல் அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. அவனது எடை கூடி, தோல் நிறம் மீண்டும் இயல்புக்கு வந்திருந்தது. டாக்டர் ஃபேபர் அவரது மருத்துவக் குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார். “பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் தனது இரட்டை சகோதரனைப் போல ஒரே மாதிரி தோற்றமளிக்கிறான்“.
ராபர்ட் சாண்ட்லரை குணமாக்கியது இரத்தப் புற்று நோய் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கியது. டாக்டர் ஃபேபரின் மருத்துவமனைக்கு, இவ் வகை நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். யெல்லா சுப்பாராவின் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து ஆண்டிஃபோலேட் மருந்துகள் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு புதிது புதிதாக வந்த வண்ணம் இருந்தன.
சிறுவர்களுக்கான இரத்தப் புற்று நோய் மருத்துவத்தில் டாக்டர் ஃபேபரின் புகழ் பரவத் துவங்க நாடெங்கிலும் இருந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அவரின் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆண்டி ஃபேலேட் மருந்துகள் கொடுக்கப் பட்டு அதன் விளைவுகள், தீவிரமாக கண்காணிக்கப் பட்டன. பெரும்பாலும், அனைவருக்கும் இரத்தத்தில் உள்ள புற்று நோய் கிருமிகள் இம்மருந்திற்கு பிறகு மறையத் தொடங்கின. நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த சில குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கே செல்லத் தொடங்கின. பல குழந்தைகளுக்கு மீண்டும் அவர்களின் உண்மையான குழந்தைப் பருவம் கிடைக்கத் தொடங்கியது.
ஆனால் நோயிலிருந்து விடுதலை எல்லாமே தாற்காலிகமாவே இருந்தது. குணமடையத் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு எல்லா நோயாளிகளுக்கும் மீண்டும் அவைக் கட்டாயமாக திரும்பித் தாக்கியது. மறுமுறை வரும்போது, அதி தீவிரமாக, இரத்த உற்பத்திக் கேந்திரமான எலும்பு மஜ்ஜையிலிருந்தே, புற்று நோய்க் கிருமிகள் உருவாகத் தொடங்கின. குணமடையத் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு சிறுவன் ராபர்ட் சாண்ட்லர் மீண்டும் புற்றுநோய்த் தாக்கி மரணமடைந்தான்.
மருத்துகள் கொடுக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும், புற்று நோய்க் கிருமிகளிலிருத்து குணமடைந்தது, அந்த விடுதலை தாற்காலிகமானதாகவே ஆனாலும் கூட, மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த சாதனையாக மாறியது. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைத்து மருத்துவக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு, நியூ இங்கிலாந்து மருத்துவ ஜர்னலில் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப் பட்டது.
டாக்டர் ஃபேபர் மருத்துவம் பார்த்த 16குழந்தைகளில், 10 குழந்தைகளுக்கு அவரின் மருந்துகள் பலனளித்தது. 5 குழந்தைகள் அவரின் மருத்துவத்தினால் குணமடைந்தனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் குணமடைந்தனர். அவர்கள் அனைவருமே, அதன் பின் அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு, அந்த சில மாதங்கள் என்பது கடவுளின் கருணைக் கொடை.
டாக்டர் ஃபேபரின் ஆய்வுக் கட்டுரை உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. சிலர் ஆதரித்தனர். பலர் அவ்வகையான பரிசோதனைகளை எதிர்த்தனர். எப்படியும் மரணம் நிச்சயம் என்ற வகையில், இதெல்லாம் மருத்துவ முறைக்குள் அடங்காது என்பது அவர்கள் தரப்பு வாதம்.
டாக்டர் ஃபேபரை பொருத்தவரையில், இந்த ஆராய்ச்சியின் முடிவு உலகிற்கு ஒரு செய்தியினை தெரிவிக்கிறது என்று நம்பினார். அந்த செய்தி, கேன்ஸர், எவ்வளவு தீவிரமான முற்றிய நிலையில் இருந்தாலும் கூட, அந்நோயை ஏதாவது ஒரு இரசாயனப் பொருளால் கட்டுப்படுத்த முடியும் என்பதே. நாலாயிரம் ஆண்டுகள் சரித்திரம் வாய்ந்த, குணப்படுத்தவே முடியாது என்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்த, கேன்ஸர் என்னும் நோய்க்கு, இது ஒரு சிறிய நம்பிக்கை வெளிச்சக் கீற்று.
டாக்டர் ஃபேபர் ஒரு கனவு கண்டார். அது, லுக்கீமியா எனப்படும் கேன்ஸர் செல்களை, ஏதோ ஒரு இரசாயனத்தின் மூலம் எதிர் கொண்டு அழிப்பது. மீண்டும் இயல்பான இரத்த அணுக்களை உருவாக்குவது. அதன் விளைவாக, இரத்த புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுதலை அளிப்பது. அவ்வகை இரசாயனங்களை மேலும் மேம்படுத்தி, அனைத்து வகை கேன்ஸர் நோயினையும் குணமாக்குவது என்பதே அந்த கனவாகும்.
டாக்டர் ஃபேபர் தனது கனவினை முற்றிலுமாக வாழ்ந்து பார்த்தார். மருத்துவ உலகிற்கு தனது மகத்தான ஆராய்ச்சியின் மூலம் ஒரு பெரிய சவாலை விடுத்தார். இனி வரும் தலைமுறை மருத்துவர்கள் அந்த சவாலை எதிர்கொண்டு, முன்னெடுத்து செல்வார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *