கிருஸ்துவிற்கு முன்பே கான்ஸர் (முதல் குறிப்பு)

கிருஸ்த்துவிற்கு முன்பே கேன்ஸர்.
பொதுவாக கேன்ஸர் நோயை நாம் ஒரு நவீன உலகின் நோய் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அந்த நோயின் அறிகுறிகள், அந்த நோய்க்கான மருத்துவ முறைகள் போன்றவைகள் அத்தகைய தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. கேன்ஸர் என்கிற பெயரே ஒரு இருபதாம் நூற்றாண்டுக்கான நோய் என்கிற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது என்கிறார் எழுத்தாளர் சூசன் சோண்டாக். அதே போல டி.பி 19ஆம் நூற்றாண்டுக்கான நோய் என்கிற தோற்றத்தை தருகிறது. இவை இரண்டுமே, ஒரு காலக் கட்டத்தில் ஒரு உயிர் கொல்லி நோயாக இருந்தது. இரண்டில் எது தாக்கினாலும், மரணம் நிச்சயம்.
டி.பியைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. அந்நோயை கவிஞர்களுக்கான நோய் என்று அழைத்ததுண்டாம். ஜான் கீட்ஸ், தனது கடைசி காலத்தில் டி.பி நோய் கண்டு ரோம் நகரில் இருந்த ஒரு சிறிய அறையில் இறந்தார். கவிஞர் பைரன் இறக்கும் போது, இதைப் போன்ற ஒரு நோய்வாய்ப் பட்டு இறக்க விரும்புவதாக அடிக்கடி தனது மனைவியிடம் கூறுவாராம். அப்படியே இறக்க நேரிட்டது.
மாறாக, கான்ஸர் உண்மையிலேயே ஒரு சம கால நோயாகவே இருக்கிறது. கான்ஸர் நோயை உருவாக்கும் அந்த அணுக்கள் அத்தனை புத்திசாலியாக இருப்பதே அதற்கு காரணம். பொதுவாக கான்ஸர் நோய் மனித உடலைத் தாக்கும் போது, அந்த உடலில் தனக்கு ஒரு சரணாலயத்தை தேர்வு செய்து கொள்கிறது. அந்த இடத்தில் பத்திரமாக பதுங்கிக் கொள்கிறது. பின் எத்தனை மருந்துகள் அந்த அணுக்களைத் தாக்கி அழித்தாலும், ஏதேனும் ஒரு புத்திசாலி அணுவேனும் அங்கிருந்து தப்பித்து, வேறு ஒரு இடத்தில் புதிதாக தனது வேலையை துவங்குகிறது.
மனித இனம் உருவானதற்கு டார்வின் சொன்ன அனைத்துக் காரணங்களும், இந்த வகை கான்ஸர் அணுக்களுக்கும் பொருந்துகிறது. இத்தனை சரித்திர புகழ் பெற்ற கான்ஸருடைய வாழ்க்கை சரித்திரமும் சில சரித்திர நிகழ்வுகளுடன் நமக்குக் கிடைக்கிறது.
கான்ஸர் எப்போது பிறந்தது? எப்போது கண்டுபிடிக்கப் பட்டது? கான்ஸர் நோயின் வயது என்ன? முதல் கான்ஸர் நோய் எப்போது, யாருக்கு தாக்கியது?
1862ஆம் ஆண்டு, எட்வின் ஸ்மித் என்ற ஒரு வணிகனுக்கு, பழம் பொருட்கள் சேகரிப்பது ஒரு பொழுது போக்காக இருந்தது. எட்வின் அப்போது ஒரு ஏலத்தில் எடுத்த பாப்பிரஸ் எனப்படும் ஒரு வகை மரத்திலான 15 அடி நீளமுள்ள ஆவணத்தில் பழைய எகிப்து மொழியாலான சில குறிப்புகள் இருந்தன. அவை கிருஸ்துவுக்கு முன் 17ஆம் நூற்றாண்டில் (17 BC) எழுதப் பட்டிருக்கக் கூடும். ஆனால் அந்த வகை எழுத்துக்கள் கிருஸ்துவிற்கு முன் 25ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப் பட்டதாக இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, அந்த குறிப்புகளை 1930ஆம் ஆண்டுதான் முழுமையாக மொழி பெயர்த்தனர்.
அவை இம்ஹோடெப் என்னும் எகிப்திய மருத்துவருடைய குறிப்புகள் ஆகும். அதில் 48 வகையான நோய்களைப் பற்றி பல குறிப்புகள் எழுதப் பட்டிருந்தன. அவை அனைத்துமே, ஒரு நவீன மருத்துவத்தின் துல்லியத்துடன் எழுதப்பட்டிருந்ததுதான் மிகுந்த வியப்புக்குரியது. இம்ஹோடெப் அதில் கை எலும்பு முறிவு பற்றி, தோல் வியாதிகள் பற்றி, முதுகெலும்பு இடம் மாற்றம் பற்றி என பல வித நோய்களையும், அதற்கான சிகிச்சை முறையினையும் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
அதில் 45ஆவது நோய்க் குறிப்பில்தான், கான்ஸர் நோய் பற்றிய உலகின் முதல் குறிப்பு நமக்கு கிடைக்கிறது. எல்லா வகை நோய்களைப் பற்றியும் அதற்கான சிகிச்சை முறையைப் பற்றியும் விரிவாக குறிப்பிடும் இம்ஹோடெப், 45ஆவது குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
நீங்கள் நோயாளியின் மார்பை பரிசோதிக்கும் போது, அவை வீக்கம் கண்டிருந்தால், உங்கள் கை அந்த வீக்கத்தினை உணர முடிந்தால், அந்த வீக்கம் சேர்க்கப்பட்டிருந்த நூல்கண்டைப் போல உணர முடிந்தால், நீங்கள் தொட்டு, தடவி பரிசோதிக்கும் போது, அந்த மார்பகம் சில்லிட்டிருந்தால், வீக்கம் தடிமனாக, கெட்டியாக, ஒரு பழுக்காத பழத்தைப் போல தட்டுப்பட்டால் அதை அவர் மார்பகக் கட்டி என்று குறிப்பிடுகிறார். அதாவது, இப்போது நாம் அறிந்த ப்ரெஸ்ட் கேன்ஸர் பற்றிய குறிப்பு அது.
மற்ற எல்லா நோய்க்கும், அவற்றின் சிகிச்சை முறையைப் பற்றி எழுதியுள்ள இம்ஹோடெப், தனது இந்த 45ஆவது குறிப்பினில், சிகிச்சை பற்றி எழுதும் இடத்தில், ஒற்றை வரியில் “ஏதும் இல்லை” என குறிப்பிடுகிறார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *