தங்க மீன்..

தங்க மீன்..
ஏதோ ஒரு மனத் தூண்டுதலுக்கு பின் எழுத ஆரம்பித்து, இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பதினோரு பதிவுகள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதுவும், கான்ஸர் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒன்று சேர்த்து பல கட்டுரைகளை எழுத மிகுந்த மன எழுச்சி தேவைப் பட்டது. முழுக்க மருத்துவம் சார்ந்த கடினமான வார்த்தைகள் கொண்ட கட்டுரைகளை தெளிவாக புரியும்படியான தமிழில் எழுதியது ஒரு திருப்தியை அளிக்கிறது.
இந்த ஆகஸ்டு மாதம் முழுவதும், அந்த மூலப் புத்தகத்துடனும், என் மேக்புக் ப்ரோ மடிக் கணிணியுடனுமே கழிந்தது. தொடர்ந்து எழுத உங்கள் பலரது பாராட்டுகளும் எனக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்தன. எனக்கும் தமிழில் ஏதேனும் எழுத ஒரு நல்ல பயிற்சியாக இருந்தது. அனைத்துக் கட்டுரைகளையும் படித்து, பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் சொல்கிறேன்! அனைத்துப் பாராட்டுகளும் மூலப் புத்தகத்தை எழுதிய சித்தார்த் முகர்ஜிக்கே..
வரும் செப்டம்பர் மாதம் நான் வெளிநாடு ( அமெரிக்கா) செல்கிறேன். தொடர்ந்து பதிவுகளை வெளியிட வேண்டும் என்பதற்காக, நான்கு ஐந்து பதிவுகளை முன்கூட்டியே எழுதி வைத்து எதிர் வரும் மாதத்தில் வெளியிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதை செய்யப் போவதில்லை. போனால் போகட்டும்!! தாற்காலிகமாக இந்த கான்ஸர் பற்றிய தொடர் கட்டுரைகளில் இருந்து உங்கள் அனைவரையும் விடுதலை செய்கிறேன்.
இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் நான் உணர்ந்த ஒரு உண்மை, கான்ஸர் ஒரு கொடிய நோய்தான். ஆனால், அந் நோய் தாக்கிய நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளாகும். அவர்களுக்காக, அரசாங்கம் செலவிட்ட தொகை, ஆராய்ச்சிக்காக செலவு செய்த பல பில்லியன் டாலர்கள் எல்லாம் முறையாக நோயாளிகளை சென்றடைந்தது. ஏனென்றால், இது நடந்தது எல்லாமே அமெரிக்காவில்.
ஆனால், கான்ஸர் அமெரிக்கர்களை மட்டும் தாக்குவதில்லை. நமது நாட்டில் கூட எத்தனையோ ஏழை குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கான்ஸர் நோயால் மரணமடைகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்சம் அவர்களின் வலிகளை குறைக்கக் கூடிய மருந்துகளாவது கிடைக்கிறதா? கான்ஸர் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் என்ன? நிச்சயம் மரணம் என்ற நிலையில் இருக்கும் இவர்களின் வாழ்க்கைக்கு, பொது மக்களாகிய நமது பங்களிப்பு என்ன?
சில மாதங்களுக்கு முன்பு, புகழ் பெற்ற கான்ஸர் மருத்துவமனையின் வரவேற்பறையில் காத்திருந்தேன். அப்போது, அங்கே, ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை மெல்ல நடத்தி அழைத்து வந்தார் ஒரு இளம் வட இந்தியத் தாய் ஒருவர். அந்தக் குழந்தைக்கு முகத்தில் ஒரு பக்கம் முழுவதும், அதாவது, ஒரு கண், காது, மூக்கு மற்றும் வாய் முழுதும் கட்டு போட்டு மூடப் பட்டிருந்தது. நமது பாழாய் போன நவீன மருத்துவம் செய்திருந்த வேலை. அந்த குழந்தை மிகுந்த வலியுடன் முனகிக் கொண்டிருந்தது.
என்னருகே அமர்ந்த அந்த தாய் என்னைப் போலவே தொலைக் காட்சியை பார்க்க தொடங்கினார். கிரிக்கெட்!! எங்கள் மூவரைத் தவிர வேறு யாருமற்ற அந்த இடத்தில், பல வண்ண மீன்கள் இருக்கும் பெரிய மீன் தொட்டியும் இருந்தது. அந்த மீன் தொட்டியின் அருகே மெல்ல நடந்து சென்ற அந்த குழந்தை சற்று நேரத்தில் சிரிக்க ஆரம்பித்தது. நான் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த தொட்டியில் உள்ள ஒரு பெரிய மீன் ஒன்று, அந்த குழந்தையிடம் ஒளிந்து, மறைந்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. ஆம்! அந்த மீன் குழந்தையிடம் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.
நான் எனது கண்களை இறுக மூடிக் கொண்டேன். என்ன செய்ய வேண்டும் என்று அந்த மீனுக்கு தெரிந்திருந்தது..
சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *