கிருஸ்துவிற்கு முன் கேன்ஸர் ( அடுத்த குறிப்பு)
இம்ஹோடெப் எழுதிய மருத்துவ குறிப்புகளுக்கு பின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நம்மிடையே கான்ஸர் பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை. அடுத்த குறிப்பாக நமக்கு கிடைப்பது கிருஸ்து பிறப்பதற்கு முன் 440 வருடங்களுக்கு முன் கிரேக்க சரித்திரவியலாளர் ஹீரோடோடஸ் எழுதிய பெர்சிய இளவரசி அடோஸ்ஸாவைப் பற்றிய கதைதான்.
அடோஸ்ஸா அன்றைய அரசர் சைரஸ்க்கும் அரசி டேரியஸ்க்கும் பிறந்தவள். மெடிட்டேரியன் கடல் பகுதி முதல் பாபிலோன் இருந்த பெர்சிய கடல் பகுதி வரை அரசரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காலம். இளவரசி அடோஸ்ஸாவிற்கு அந்த கொடும் நோய் தாக்கியது. அவளின் மார்பகத்தில் இருந்து இரத்தம் வடியத் துவங்க, அவளுக்கு மிக முற்றிய நிலையிலான மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இளவரசி விரும்பியிருந்தால், அன்றைய அவர்களின் சாம்ராஜியத்திலிருந்து மிகச் சிறந்த மருத்துவர்கள் எல்லாம் அவளின் சிகிச்சைக்காக வந்து குவிந்திருப்பார்கள். ஆனால், இளவரசி அடோஸ்ஸா, தன்னை எல்லா வித சிகிச்சையிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, தன்னைத் தானே ஒரு வித தனிமைச் சிறைக்கு உட்படுத்திக் கொண்டாள். எந்த மருத்துவரையும் தன்னிடம் நெருங்க விடாமல் இருந்த இளவரசி அடோஸ்ஸாவை, அவளின் அடிமையான டிமோசிடஸ் மெல்லப் பேசி ஒரு கடைசி முயற்சிக்கு சம்மதிக்க வைத்தான்.
ஒரு நாள் இரவு, யாருமற்ற அந்த தனிமையில், அடிமை டிமோசிடஸ், மிகச் சிறிய உபகரணங்களை கொண்டு, இளவரசி அடோஸ்ஸாவின் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியினை அகற்றினான்.
அதற்கு பின்னான ஹீராடோடஸின் குறிப்புகளில், இளவரசி அடோஸ்ஸாவைப் பற்றி எந்த வித குறிப்புகளும் இல்லாமல் போனது. இளவரசிக்கு முழுமையான குணம் கிடைத்ததா? புற்று நோய் மீண்டும் அவளுக்கு தாக்கியதா? எந்த குறிப்புகளும் இல்லை.
ஆனால், இளவரசி அடோஸ்ஸா அதன் பின் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கிறாள். அவள் தனது தீராத வலியிலிருந்தும், மீள முடியாத நோயிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய தனது அடிமை டிமோசிடஸ்ஸிற்கு நன்றி கூறி, அவன் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தாள். அந்த நேரத்தில், சிந்தியா என்ற நாட்டின் மீது படையெடுக்க ஆயுத்தம் செய்து கொண்டிருந்த அரசரை வேண்டிக் கேட்டு, தனது அடிமையான டிமோசிடஸின் சொந்த நாடான கிரீஸ் நாட்டைத் தாக்கி விடுதலை பெற்றுத் தந்தாள்.
சரித்திரத்தில் முதன் முதலில் ஆயிரம் கப்பல்கள் கொண்டு படையெடுக்கப் பட்ட போர் அது. அந்தப் போரை சாத்தியப் படுத்தியது, இளவரசிக்கு வந்த கான்ஸர் நோய்தான் என்று சில சரித்திரவியலாளர்கள் சொல்கின்றனர்.
என்னதான், நமக்கு பல குறிப்புகள் சரித்திரத்தில் இருந்து கிடைத்திருந்தாலும், அவை எல்லாமே கதைகளுக்கே உரிய ஒரு நம்பத்தன்மை குறைவு உள்ளதாகவே இருக்கிறது. மருத்துவத்திற்கு, வெறும் சரித்திரம் மட்டும் போதாது. அதற்கு, முழு ஆதாரங்கள் தேவைப் படுகிறது. அத்தகைய உண்மை ஆதாரங்கள் கிடைத்த இடம் பெரு நாட்டில் இருந்த ஒரு மிகப் பெரிய மயான பூமியில்தான். 1990ஆம் ஆண்டு அங்கே கிடைத்த 140 பிணங்களை பிணப் பரிசோதனை செய்ததில், ஒரு இளம் பெண்ணிற்கு இடுப்பு எலும்புக்குள் கான்ஸர் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
பின்னாளில், எகிப்து நாட்டில் தோண்டப் பட்ட பல மம்மிகளை பரிசோதனை செய்ததில், பல நோய்களுக்கான ஆதாரம் கிடைத்தன. அதில் கான்ஸர் நோயும் அடக்கம். இரண்டாயிரம் வயதுடைய ஒரு மம்மிக்கு கான்ஸர் நோய் இருந்ததற்கான ஆதாரமே நம்மிடையே உள்ள பழமை வாய்ந்த ஆதாரமாகும்.
அந்நாளைய நோய்களான, தொழு நோய், டி.பி., அம்மை போன்ற நோய்கள் எல்லாம் அவ்வப்போது பல மனித நாகரீகங்களையே வேரோடு அழித்திருக்கிறது. இந்து மதத்தில் அம்மை நோய்க்கென தனி கடவுளே இருக்கிறது. ( நம்ம ஊர் “மாரியாத்தா”வைத்தான் சொல்கிறார்கள்!). ஆனால், மற்ற நோய்களை போல் இல்லாமல், கான்ஸர் நோய், தனக்கென தனி அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறது. மற்ற உயிர் கொல்லி நோய்களெல்லாம், இவ் உலகத்தை விட்டு ஒழிந்து விட்ட போதிலும், கான்ஸர் மட்டும் இன்னும் நீடிக்கிறது. மனித அறிவிற்கு சவால் விட்டபடியே…