அறம் புத்தகம் வெளியீட்டு விழா

நண்பர்களே!

பல ஆயிரம் வாசகர்களை ஒன்றரை மாத காலம் ஒரு உன்னத மனநிலையில் நிறுத்திருந்தது என்று இந்த அறம் புத்தகத்தின் அட்டையில் ஒரு இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது நான் என் பல நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தாம். ஷைலஜாவும் அதே போல உணர்ந்திருப்பது, பப்ளிஷர் அல்லாத அவரின் வாசக மனதை காட்டுகிறது. அவர் ஒரு போதும் தொழில் முறை பப்ளிஷர் ஆக முடியாது என்னும் என்னுடைய கருத்தையும் உறுதி செய்கிறது.

அறம், சோற்றுக் கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள் போன்ற மிகச் சிறந்த கதைகள் என்னை ஈர்த்து கட்டிப் போட்டிருந்தாலும், வணங்கான் கதை எனக்கு தனிப்பட்ட ஒரு சிலிர்ப்பை கொடுத்தது. புத்தகம் வந்தவுடன், மீண்டும் அனைத்துக் கதைகளையும் படிக்கும்போது, அதற்கான காரணம் எனக்கு புரிந்தது. ஆம்! வணங்கான் ஒரு மிகச் சரியான திரைக்கதை வடிவத்தில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

திரைக்கதைக்கு தேவையானது மிகச் சிறப்பான ஆரம்பம். கறுத்தான் அதாவது வணங்கானின் அப்பா ஜமீன் அடிமைத் தனத்திலிருந்து தப்பி வெளிவந்து, ஒரு சிறிய நகரத்தில் இட்லி கடையில் வேலைக்கு சேர்வது வரை என்னால் காட்சிப் படுத்தி பார்க்க முடிகிறது. உண்மையிலேயே பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த எட்டு திக்கும் மத யானைகள் கதையில், பூலிங்கம் தனது கிராமத்தில், வைக்கோல் படப்பையை கொளுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறுவதுதான், நான் இதற்கு முன் படித்திருந்த சிறப்பான துவக்கம்.

பிறகு, கறுத்தான் எழுத படிக்க கற்றுக் கொள்வது, தனது ஆதர்ச நாயகனாக நேசமணியை முதன்முறை பார்ப்பது, பின் அரசாங்க உத்யோகத்தில் சேர்வது என்று, கதை நேர்த்தியாக நகர்ந்து கொண்டே போகிறது. இப்போது கதைக்கு தேவையானது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை. அது அந்த ஊர் ஜமீந்தார் வடிவில் வந்து சேர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டல்கள் அதிகமான போது கறுத்தான், அதாவது, கதையின் நாயகன் ஒரு முடிவெடுத்தாக வேண்டியிருக்கிறது. அந்த உக்கிரமான தருணத்தில் கறுத்தான், தன்னை மிரட்டும் தலையாரியிடம் சொல்வது

“முடிஞ்சா கூட்டிட்டு போடா! சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதோட வேலைக்காரனை பாதுகாக்குற சக்தி இருக்கா இல்லையான்னு பார்த்திருவோம்“. இது ஒரு சூப்பர் டயலாக். கதை அடுத்த கட்டத்துக்கு போகிறது.

ஜமீந்தாரின் கணக்குப் பிள்ளையே நேரிலேயே வந்து மிரட்டும் போது சொல்வதுதான் கதைக்கு மிகத் தேவையான மையப் புள்ளி.

“உமக்கெல்லாம் கணக்கு வேலைன்னா பல அர்த்தம் உண்டு. அதை வச்சு நீர் என்ன ஆட்டமும் ஆடலாம். நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்த பிடி எனக்கும், எனக்கு பின்னால வர ஏழு தலைமுறைக்கும் உண்டான பிடி. இப்ப இந்த பிடிய விட்டுட்டனா எட்டு தலை முறைகளும் கீழ விழுந்துடும்”

உண்மையில், இந்த மாதிரியான சக்தி வாய்ந்த மையப் புள்ளி இல்லாமல்தான் நாம் பார்க்கும் சிறந்த உலகப் படங்கள் கூட இருக்கிறது.

பிறகு, நேசமணி நேரில் வருவதும், யானை மீதேற்றி கறுத்தானை ஜமீன் இல்லத்துக்கு அழைத்து செல்வதும், அதன் பின் கறுத்தான் தனது வாழ்க்கையில் ஜெயிப்பதும் ஒரு காட்சிப் படுத்தலுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத மிக சொகுசான கதை.

நண்பர்களே! இந்த கதையை ஒரு திரைக்கதையாக நான் பார்த்து பேசுவது எந்த விதத்திலும் அதன் தற்போதைய வடிவத்தை குறை சொல்வதாக கருத வேண்டாம்.

ஒரு மகத்தான மனிதனின் கதையை ஜெயமோகன் எழுதியிருக்கும் விதம் எப்படி ஒரு திரைக் கதைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை சுட்டி காட்டுவதற்காகத்தான் இதை நான் சொன்னேன்.

எனது அப்பாவும், இதே போல ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பிழைக்க வந்தவர். சொத்து பிரிக்கும் போது, தனது தம்பி மனைவி ஏதோ சொன்னார்கள் என்பதற்காக, தனது பங்கையும் அவரின் தம்பிக்கே எழுதி வைத்து விட்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு ஒற்றை பசு மாட்டுடன், நகரத்துக்கு பிழைக்க வந்ததாக சொல்வார்.

இப்படி இந்த அறம் கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னை அந்த கதையுனுள் பொறுத்திக் கொள்ள முடிகிறது. அதுவே இந்த கதைகளின் வெற்றி ஆகும். நூறு நாற்காலிகள் கதை மட்டும் அதில் ஒரு தனி வகை என்று கருதுகிறேன்.

நான் பள்ளியில் படிக்கும் போது, எங்களது பஸ் கம்பனிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு தமிழ் ஆசிரியர் வருவார். அவர் கையில் இருக்கும் 40 பக்க நோட்டு புத்தகத்தில், நெருக்கமாக வெண்பா எழுதப் பட்டிருக்கும். அதை ஒரு போதும் என் அப்பா படிப்பதில்லை. தனது கையில் வாங்கி அதை புரட்டிப் பார்த்து விட்டு அவருக்கு 25ரூபாய் கொடுக்க சொல்வார். 1980களில் அது கணிசமான பணம். எனக்கும், எங்களது கணக்கு பிள்ளை ஐயருக்கும் உண்மையிலேயே வயிறு எறியும். அப்போதெல்லாம் எனக்கு பாக்கட் மணி தினந்தோறும் 5 ரூபாய். எங்கள் கணக்கு பிள்ளைக்கு தினந்தோறும் 15 ரூபாய் மற்றும் 600 ரூபாய் சம்பளம்.

எனது அப்பா இல்லாத நேரங்களில் அந்த தமிழ் ஆசிரியர் வந்தால் அவரை அமர வைத்து கடுமையாக கிண்டல் செய்வது எங்கள் வழக்கம். அவர் பதிலுக்கு ஒரு பேச்சு கூட பேச மாட்டார். அமைதியாக அமர்ந்திருப்பார். எனது அப்பா வந்த உடன், தனது பையிலிருந்த அந்த நோட்டு புத்தகம் வெளியில் வரும். தனக்கான 25 ரூபாயை பெற்றுக் கொண்டு பேசாமால் போய்விடுவார்.

ஒரு நாள், எதற்கோ என் அப்பா தனது கல்லாப் பெட்டியின் சாவியை கொடுத்து என்னவோ எடுத்து வர சொன்னார். திறந்து அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு, கதவை மூடப் போன எனக்கு அந்த நோட்டுப் புத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்து புரட்டிப் பார்த்தேன். இன்னமும் அந்த கணம் எனக்கு தெளிவாக நினைவில் இருக்கிறது. நீல கலர் எழுத்தில் மிக நெருக்கமாக எழுதப் பட்டிருந்த பல வெண்பாக்களில் அவ்வப்போது அல்லது அடிக்கடி சிகப்புக் கலரில் வனிதாமணி என்று எழுதப் பட்டிருந்தது. படித்துப் பார்க்காமலே ஏன் அவர் பணம் கொடுக்க சொன்னார் என்ற காரணம் எனக்கு ஓரளவு புரிந்தது. எனது அம்மாவின் பெயர் வனிதாமணி.

பின்னாளில், வேறு எதற்கோ கோபித்து கொண்டு சென்றிருந்த கணக்கு பிள்ளை ஐயரை சமாதானம் செய்து அழைத்து வர வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. திரும்பி வந்த அவர் சொன்ன ஒரு காரணம், சும்மா 40 பக்க நோட்டில் கிறுக்கி கொண்டு வரும் வாத்திக்கு பணம் கொடுக்கும் என் முதலாளி எனக்கு ஏன் நான் கேட்கும் போது கொடுப்பதில்லை?

எனது அப்பா அப்போது சொன்னது, ஐயரே! அவன் படிச்சவன். அதுவும் தமிழ் படிச்சவன். அவன் சாபம் விட்டா நான், நீ யாரும் தாங்க மாட்டம்யா!

அறம் கதை எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது நீங்கள் உணருவீர்கள். இப்படி நமக்கு தெரிந்த, கேள்வி பட்ட, அல்லது தெரியாத, கேள்வி படாத அற்புத மனிதர்களைப் பற்றி கதைகள் இவை.

ஆங்கிலத்தில் Chicken soup for Soul என்ற வகையில் இப்படி ஒரு கதை வரிசை உண்டு. அதாவது அந்த கதை, கட்டுரைகளை படித்தோமானால், அதில் இருக்கும் கதை மாந்தர்கள் செய்யும் தியாகங்கள், அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஆகியவை, படித்து முடித்தவுடன், நம்மை அழ வைத்திருக்கும். நம்மை நெகிழ்ச்சியாக மாற்றி, நமக்கு இருக்கும் தற்கால சங்கடஙகள் அனைத்துமே அவைகளுக்கு முன் ஏதும் இல்லை என்று எண்ண வைப்பதுதான் அவைகளின் நோக்கம்.

பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன, அவை அனைத்துமே படித்த உடன் நாம் மறந்து விடுவோம். நம் மனதில் ஆழத்தில் ஊடுருவி சென்று அங்கே தங்கி நிற்கும் தகுதியினை சில கதைகளே பெறுகின்றன. அவைகளையே நான் இலக்கியம் என்று கருதுகிறேன்.

அறம் கதை வரிசை வெறுமே Chicken soup for soul கதைகள் அல்ல! இந்த கதைகள் எழுதப் பட்டிருப்பது ஜெயமோகன் என்னும் தேர்ந்த எழுத்தாளனால்.

கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்னும் சொற்றடர், மொத்த கதையினையும் உருவகப் படுத்தி நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறது. இதற்கு மேல் ஒரு வார்த்தை எனக்கு சொன்னாலும் அது அதிகம்தான். அந்த ஒரு வாக்கியம் கதையின் அடி நாதத்தை எனக்கு புரிய வைக்கிறது.

எனக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் இந்த ஒரு கதையை தவிர்த்து, மற்ற எல்லா கதைகளிலும் இப்படியான உயிர் சொற்றடர்களை என்னால் குறிப்பிட முடியும். எனக்கு பின் பேசும் அனைவரும் அதைத்தான் செய்ய இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த அறம் புத்தகம், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் என்று நான் கருதுகிறேன். என்னுடைய புத்தக அறையில், திருக்குறள், கம்பன், அகம் மற்றும் புறம், பாரதி என்ற வரிசையில் நான் இந்த புத்தகத்தை வைப்பேன்.

ஒரு வாசகனாக இந்த புத்தகம் உருப் பெருவதை என் கண் முன்னே பார்த்த வகையிலும், இக் கதைகளை எழுதிய எழுத்தாளரை நான் அறிவேன் என்ற முறையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த புத்தக வெளியீட்டு விழாவினில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்ற நினைவிலும் நான் எப்போதுமே பெருமைப்பட்டுக் கொள்வேன்…

அனைவருக்கும் நன்றி…

26.11.2011 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அறம் புத்தக வெளியீட்டு விழாவினில் நான் பேசிய உரை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *