இந்த முறை நம்ம கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னரை அழைத்தால் என்ன கருணா?
எனது நண்பர் பவா செல்லதுரைக்குதான் இந்த மாதிரி யோசனையெல்லாம் தோணும்! நிஜமாகவே “பெரிதினும் பெரிது கேள்” டைப்!
இதெல்லாம் ஓவராத் தெரியலையா பவா என்றேன்.
இதிலென்ன தப்பு! முயற்சிதானே செய்யப் போறோம்! நடக்காதுன்னு இப்பவே ஏன் ஒரு முடிவுக்கு வரணும்?
நியாயம்தானே! சரி! ஓகே! என்று சொல்லி விட்டேன்.
இப்படித்தான், எங்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக கவர்னரை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அந்தக் கணத்தில் விதி அந்த அறையின் ஒரு மூலையில் இருந்து என்னைப் பார்த்து சிரித்தது (உவமை:சுஜாதா) எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
கவர்னரை அழைப்பது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். இனி எங்கள் விழாவிற்கு வருவது என்று கவர்னர் முடிவு செய்ய வேண்டுமே!
கவர்னரை விழாவிற்கு வரவேற்று, ஒரு அழைப்புக் கடிதம் எழுதுவது என்பது விழா ஏற்பாட்டின் முதல் கட்டம். அதன்படி, எங்கள் அலுவலக மேலாளர் மாதிரிக் கடிதம் ஒன்றினை எழுதிக் கொண்டு வந்தார். எங்கள் கல்லூரியைப் பற்றிய ஒரு அறிமுகக் கடிதம் அது. படிக்கப் படிக்க நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதெல்லாம் உண்மையாகவே நமது கல்லூரியில் நடந்ததா என்ற சந்தேகம் எனக்கே கூட வந்து விட்டது. தேவையில்லாத ஆணியெல்லாம் அதிலிருந்து பிடுங்கிப் பார்த்த பின்பு கூட, அந்தக் கடிதம் கட்டுங்கடங்காமல் திமிறிக் கொண்டிருந்தது.
சரி! நாமே எழுதுவோம் என்று எண்ணி, எனது மேக் புக் ப்ரோவில் (எனது செல்ல நோட்புக் )
நேரடியாக, எளிமையான வார்த்தைகளைப் போட்டு ஆங்கிலத்தில் ஒரு பக்க கடிதம் ஒன்றினை எழுதித் தந்து, அதையே அனுப்பி விடுமாறு சொன்னேன். தமிழ்க் கதையின் இலக்கணப்படி அதை நான் மறந்தும் போனேன்.
ஒரு நாள் காலை அலுவலகம் சென்றவுடன், மேசையின் மீதிருந்த அன்றைய அலுவலக நிரலில், தொலைபேசியில் அழைத்திருந்தவர்கள் வரிசையில், இப்படி எழுதப்பட்டிருந்தது!
கவர்னர் அழைத்திருந்தார் : நேரம்: காலை 10:30
நவரசங்களில் எந்த ரசம் அப்போது என் முகத்தில் இருந்தது என்பது எனக்கு நினைவில்லை. ரொம்ப நேரமாக அழைப்பு மணியைத் தேடி, அது கிடைக்காமல், பதட்டத்தில் இண்டர்காமில் எல்லா தப்பு எண்ணையும் அழைத்து, அதுவும் சரி வராமல், நானே எழுந்து அறைக்கு வெளியில் சென்று பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல்,
இதென்ன கவர்னர் அழைத்திருந்தார்! என எழுதியிருக்கு? என்றேன்.
ஆமாம் சார்! கவர்னர் ஆஃபீஸில இருந்து போன் வந்துச்சு!
அப்ப, கவர்னர் ஆஃபீஸ்ல இருந்து போன் என்று எழுத வேண்டியதுதானே? அதென்ன கவர்னரிடம் இருந்து போன்! அசட்டுச் சிரிப்புடன் (இல்ல! ஒரு விளம்பரம்… ) பதில் பேசாமல் அமைதியாக நின்றார்கள்.
நம் ஆஃபீஸ்ல இருக்கிறவர்களும் நம்மைப் போலத்தானே இருப்பார்கள் என்று சமாதானப்படுத்திக் கொண்டு, சரி!சரி!கவர்னருக்கு போனைப் போடுங்க என்றேன். அவர்கள் விழித்து நிற்பதைக் கண்டு, அதான்யா! கவர்னர் ஆஃபீஸுக்கு போன் போடுங்க என்று சொல்லி மீண்டும் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன்.
நீண்ட நேரமாகியும், ஒன்றும் நடக்காததால், மீண்டும் அழைத்துக் கேட்டேன். அப்போதுதான் சொல்கிறார்கள் அவர்கள் யாருக்கும் கவர்னர் மாளிகையின் தொலைபேசி எண் தெரியாது என்று! நமக்கு வாய்த்த ஊழியர்கள்… என எண்ணிக் கொண்டு, அதை கவர்னர் மாளிகை வெப்சைட்டில் பார்த்துத் தொலைக்க வேண்டியதுதானே எனக் கத்தினேன்.
அப்படி நினைத்த மாத்திரத்தில் யாரும் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட முடியாது எனவும், தாங்கள் அழைக்க வேண்டியவர்களை, அவர்கள் மாத்திரமே தொடர்பு கொண்டு பேசும் விநோத அமைப்பு அது என்பதையும் நான் புரிந்து கொண்ட போது அன்று மாலையாகி விட்டது. எனவே, கவர்னர் அலுவலகத்திலும், எனது அலுவலகத்திலும் இருந்த அனைவரும் பணி முடிந்து வீடு திரும்பி விட்டனர்.
நான் மட்டும், நீண்ட நேரம் “கவர்னர் அழைத்திருந்தார்” குறிப்பையே முறைத்துப் பார்த்திருந்துவிட்டு, இரவு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பினேன். அன்று இரவு என்னுடைய கனவில், கவர்னர் மொபைல் போனில் அழைத்து என்னிடம் பேசினார் என்பதை ஊகிக்க முடியாதவர்கள், இந்தக் கதையிலிருந்து இக்கணமே விலகிக்கொள்ளவும்.
மறுநாள் காலையில், டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பவா போனில் அழைத்தார். என்ன பவா? என்றேன்.
கவர்னர் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது போன் வந்துச்சா கருணா? என்றார். இவருக்கெப்படித் தெரியும்? என எண்ணிக் கொண்டு, நேற்று நடந்ததை சொன்னேன். அவரோ சிரித்தபடி, போன் செஞ்சதே நம்ம நண்பர்தான் கருணா! அவர் கவர்னர் அலுவலகத்தில் மிக முக்கியப் பணியில் இருக்கிறார். அவரிடம், சும்மா நம்ம விஷயத்தை சொல்லி வைப்போமே! என்று சொல்லியிருந்தேன். அவர்தான் உங்களை அழைத்தாராம். நம்ம சைடிலிருந்து ரெஸ்பான்ஸ் ஏதும் இல்லையென ரொம்ப வருத்தப்பட்டார் என்றார்.
உடனடியாக, பவா குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்த அந்த மொபைல் எண்ணை அழைத்துப் பேசினேன். மிகவும் சினேகமாகப் பேசிய அந்த நண்பர், என்னை நேரில் வந்து கவர்னரின் சிறப்பு அதிகாரியை (OSD) சந்திக்கும்படியாக அழைத்து, அச்சந்திப்பிற்கான தேதியும், நேரமும் வாங்கித் தந்தார். இப்படித்தான், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆளுநர் மாளிகைக்குள் நான் சென்றேன்.
அது ஒரு ஜுலை மாதம். வெளியே கடும் வெயிலில் சென்னை மாநகரம் தனலாய்த் தகித்துக் கொண்டிருந்ததின் எந்த ஒரு அடையாளமும் இன்றி, காடு போல மரங்கள் சூழ்ந்த நிரந்தர நிழலில் அமைந்திருந்தது கவர்னரின் வீடு! அதாவது ஆளுநர் மாளிகை!
நுழைவாயிலில், அன்றைய விருந்தினர்கள் பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா என்று சோதனை செய்யும் நேரத்திலேயே, ஒரு காவல்துறை அதிகாரி என்னருகே வந்து என்னை அடையாளம் கண்டு கொண்டார். சற்று நேரத்தில் முன்புறம் ஒரு எஸ்கார்ட் ஜீப் வழிகாட்ட ஆளுநர் மாளிகையின் தனிச் செயலாளர் அலுவலகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். பவாவின் நண்பர் உண்மையிலேயே முக்கியப் பொறுப்பில்தான் இருக்கிறார் என்று முதன்முதலாக ஒரு நம்பிக்கை வந்தது.
நுழைவாயிலில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு அடர்ந்த வனத்தினுள் செல்வது போன்ற ஒரு நீண்ட பயணம். சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மான்கள் கூட்டம் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த இரண்டு பிரம்மாண்டமான வெண்நிற மாளிகைககளில் ஒன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டேன். நண்பரின் தனி அலுவலகம் அதற்குள்ளாகத்தான் இருந்தது.
இந்த மாளிகையின் வாசல்கள், பளபளக்கும் தரைகள், தரை விரிப்புகள், உத்திரம், அறைகளின் பிரம்மாண்டமான நுழை வாயில்கள், சுவற்றின் மிக அற்புதமான ஓவியங்கள் என ஒவ்வொன்றாக நினைவுபடுத்திச் சொல்ல பல நூறு விஷயங்கள் இருக்கிறது. நான் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு சென்று பார்த்திருக்கிறேன். ஒப்பீட்டளவில், நமது தமிழக ஆளுநர் மாளிகை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் அந்த வெள்ளை மாளிகை வெறும் தனுஷ்!
இந்தக் கதைக்கு கவர்னர் மாளிகையின் டீ என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அத்தனை அற்புதமான மசாலா டீ ஒன்றினை நண்பர் எனக்குக் கொடுத்து உபசரித்தார். இன்னொரு கப் கேட்கலாமா என்று யோசித்தேன். பின்னாளில், அடிக்கடி அங்கு சென்று டீ குடிப்பேன் என்பது எனக்கு அப்போது தெரியாமல் போனது.
நண்பர் என்னை, அருகிலிருக்கும் மற்றொரு மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் கவர்னர் வசிக்கும் மாளிகை. பார்வையாளர்கள் காத்திருப்பு அறை, கவர்னரின் சிறப்புச் செயலாளர் அறை, கவர்னர் தனது பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை என எல்லாமும் அங்கேதான் இருக்கிறது. அதன் நுழைவாயிலில் என்னிடமிருந்து மொபைல் போன் அகற்றப்பட்டு, நான் பரிசோதிக்கப் பட்டேன்.
பிறகு, மாடியில் இருக்கும் கவர்னரின் சிறப்புச் செயலரின் அறைக்குச் சென்றோம். மற்றுமொரு சினேகமான மனிதர் அவர். எங்கள் அறிமுகப்படலத்திற்குப் பின், அவர் என்னை கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியிடம் (ADC) அறிமுகப் படுத்தினார்.
அங்கே சில விவரங்கள் கேட்கப் பட்டது. அதில் முதல் கேள்வி!
எங்கே இருக்கு இந்த திருவண்ணாமலை?
எனது வாழ்வில் நான் அடிக்கடி எதிர்கொண்ட மிக முக்கியமான கேள்வி இதுதான்!
அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர்,
அவர்கள்தம் திருக்கோயில்,
அக்னி ஸ்தலமாய் ஓங்கி நிற்கும் அண்ணாமலை,
பெளர்ணமி, கிரிவலம்,
ரஜினிகாந்த், இளையராஜா,
இரமணரின் ஆஸ்ரமம் உட்பட பல ஆஸ்ரமங்கள் என இன்னும் எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் கூட, அவ்வப்போது நானும் என் பார்வையில் ஒரு அறிமுகத்தை எனது ஊருக்குத் தர வேண்டியிருக்கும்.
தேர்ந்த பயிற்சி இருப்பதால், சில நிமிடங்களில் அதைச் சொல்லி முடித்தேன்.
அடுத்தக் கேள்வி! இங்கிருந்து எவ்வளவு தூரம்?
ஒரு மூன்று மணி நேரத்தில் போய் விடலாம் சார்!
கவனிக்க! தூரத்தை சொல்லவே மாட்டேன்! நேரத்தைதான் சொல்லுவேன்.
பெரும்பாலும் அது வொர்க் அவுட் ஆகிவிடும். (அனுபவம்தான்!)
சரி! உங்களுக்கு வசதியான ஒரு மூன்று தேதிகளை கொடுங்கள்! கவர்னரிடம் கேட்டுச் சொல்கிறோம் என்றனர்.
எனக்கு வசதியாகவா! சார்! You must be kidding!
நீங்கள் ஒரு தேதியை சொல்லுங்கள். அதில் நான் நிகழ்ச்சியை வைத்துக் கொள்கிறேன் என்றேன்.
அவர் தனது டைரியை எடுத்து என்னிடம் தந்தார்.ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு சில தேதிகள் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.
ஏதேனும் ஒரு சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாமா என்றார்!
நோ ப்ராப்ளம் சார்! என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளிருந்து அழைப்பு மணி ஒலித்தது.
கூப்பிடுகிறார்! உள்ளே போங்கள் சார்! என்றார்.
எனக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. என்னை யார் கூப்பிடுகிறார்கள் என விழித்தேன்.
மீண்டும், உள்ளே போங்கள் சார்! என்றவுடன், எழுந்து அந்தப் பெரிய அறையினுள் நுழைந்தேன்.
அந்தப் பெரிய அறையில் ஒரு அழகான நாற்காலியில் தனியாக அமர்ந்திருந்த தமிழக ஆளுநர். ஹிஸ் எக்ஸெலென்ஸி. டாக்டர்.கே.ரோசய்யா எழுந்து நின்று,என்னை வரவேற்று,என்னிடம் கைகொடுத்துச் சொன்னார்.
ஐ யாம் ரோசையா. கவர்னர் ஆஃப் தமிழ்நாடு!