அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் உள்ளுக்குள் தகிக்கும் அவன் நினைவுகளின் வெப்பம் தாளாமல் கதறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன்.
யாழ்ப்பாணம் நூலக எரிப்பை எனது பள்ளி தமிழ் ஆசிரியர் விவரித்தபோது, அய்யோ! அந்த அறிவுப்பெட்டகத்தை இழந்த பிறகு இனி, எந்த நாட்டைப் பெற்று என்ன ஆகப்போகிறது? என்று கதறியக் காட்சி எனக்கு நினைவுக்கு வந்தது.
மரணம் சத்தியம். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த வாக்குறுதி. அது ஒருவகையில் விடுதலை.
ஆனால், அங்கே என் தம்பியின் உடல் எரியூட்டப்படும்போது, உடன் அவன் மூளையும் வெந்து உருகப் போகும் நினைப்பே என்னை அங்கு அத்தனைப் பேர் முன்னே கதறி அழச்செய்தது.
தனது பன்னிரெண்டாவது வயதினில் அவன் துவங்கிய வாசிப்பு அன்று காலை ரத்தவாந்தி எடுத்து மயங்கிச் சரியும் வரையில் அவனுடனே தொடர்ந்து வந்தது.
அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் உள்ளுக்குள் தகிக்கும் அவன் நினைவுகளின் வெப்பம் தாளாமல் கதறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன்.
யாழ்ப்பாணம் நூலக எரிப்பை எனது பள்ளி தமிழ் ஆசிரியர் விவரித்தபோது, அய்யோ! அந்த அறிவுப்பெட்டகத்தை இழந்த பிறகு இனி, எந்த நாட்டைப் பெற்று என்ன ஆகப்போகிறது? என்று கதறியக் காட்சி எனக்கு நினைவுக்கு வந்தது.
மரணம் சத்தியம். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த வாக்குறுதி. அது ஒருவகையில் விடுதலை.
ஆனால், அங்கே என் தம்பியின் உடல் எரியூட்டப்படும்போது, உடன் அவன் மூளையும் வெந்து உருகப் போகும் நினைப்பே என்னை அங்கு அத்தனைப் பேர் முன்னே கதறி அழச்செய்தது.
தனது பன்னிரெண்டாவது வயதினில் அவன் துவங்கிய வாசிப்பு அன்று காலை ரத்தவாந்தி எடுத்து மயங்கிச் சரியும் வரையில் அவனுடனே தொடர்ந்து வந்தது.
தினமும் நூறு பக்கங்கள். இது நா.முத்துகுமாரின் வாசிப்புக் கணக்கு. இருபத்தெட்டு ஆண்டுகளில் ஒரு நாள் கூட தவறாமல் அவன் கடைப்பிடித்து வந்த விரதம்.
தமிழைப் போலவே அதே வேகத்தில் ஆங்கில இலக்கியங்களையும் படிக்கும் நுண்திறனை வளர்த்துக் கொண்டதால், உலக இலக்கியத்தின் எந்த ஒரு புதிய ஆக்கமும் அவன் பார்வைக்கு வந்த பிறகே தமிழுக்குத் தெரிய வரும். எந்த உரைநடையும் சிக்கலாகும்போது, அது வாசகனை விலகச் செய்யும். நா. முத்துக்குமாருக்கு மட்டும் சிக்கலான உரைநடையே எப்போதும் மிக விருப்பம். அதை ஓர் சவாலாக எடுத்துக் கொண்டு வாசித்து முடிக்கும் போர்க்குணம் அவனுக்குண்டு. கோணங்கியின் மொத்தப் படைப்புகளையும் வாசித்தவன் நீ ஒருவனாகத்தான் இருப்பாய் என நான் அவனை கிண்டல் செய்வதுண்டு.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாள் நண்பர் பவா.செல்லதுரையின் வீட்டில் எனக்கு இவர்தான் கவிஞர் நா. முத்துக்குமார்! சினிமாவிலும் பாடல்கள் எழுதுகிறார் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நா.மு புகழ் பெறத் தொடங்கியிருந்த நேரம். அன்று நாங்கள் பேச்சு! பேச்சு! என தமிழ் கவிதைகளைப் பேசித் தீர்த்தோம்.
அந்த சமயத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும், நா.முத்துக்குமாரும் இணைந்து நடத்தும் கவிதைப் பயிலரங்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகு பிரசித்தி. முதன் முறையாக ஒரு பொறியியல் கல்லூரியில் தமிழ் கவிதையை எப்படி வரவேற்கிறார்கள் என சோதித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். வெகு சிறப்பாக நடந்து முடிந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நா.முத்துகுமார் என்னிடம் அவர் கவிதைத் தொகுப்புகள் சிலவற்றைத் தந்து சென்றார்.
மறுநாள் அதைப் பிரித்துப் படித்த எனக்கு முதல் கவிதையிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
‘பொண்டாட்டி தாலியை அடகு வச்சு
கவிதைத் தொகுப்புப் போட்டால்…
தாயோளி! அதை விசிட்டிங் கார்டு போல
கொடுக்க வேண்டியிருக்கு’
என்றது.
உடனே காரில் சென்னைக்குப் புறப்பட்டேன். நண்பரிடம் ஒரு கவரில் பத்தாயிரமும், இன்னொரு கவரில் ஆயிரமும் பணம் வைத்து முத்துக்குமார் அறைக்கு அனுப்பி அவற்றைக் கொடுத்து வரச் சொன்னேன். கொடுக்கப் போன காரிலேயே நா. முத்துக்குமார் உடன் வந்தார்.
எதுக்கு சார் ரெண்டு கவர்?
ஒண்ணு நீங்க கல்லூரி நிகழ்ச்சியிலே கலந்துட்டதுக்கு..
இன்னொண்ணு?
உங்க கவிதைத் தொகுப்புக்கு! நீங்களே பொண்டாட்டி தாலியை அடமானம் வச்சுப் போட்டிருக்கீங்க! அதை ஓசியிலே வாங்கிட்டா எப்படின்னு…
சிரித்தபடி, சார்! அது பட்டிமன்றக் கவிதை பாதிப்பு. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! என்றபடி இந்தாங்க.. என்று இரண்டு கவரையும் என்னிடம் நீட்டினார்.
நான் அவரை வியப்புடன் பார்க்க,
சின்ன கவரை திரும்ப வாங்கிட்டா நீங்க என் வாசகர். பெரிய கவரை வாங்கிட்டா நீங்க என் நண்பர். ரெண்டு கவரையுமே திரும்ப எடுத்துக்கிட்டா நீங்க என் அண்ணன் என்றார்.
இப்படித்தான், உடன் பிறந்த தம்பி இல்லாத வெற்றிடத்தை என் தம்பி நா.முத்துக்குமார் இட்டு நிரப்பினான்.
அன்றிலிருந்து அவன் வாழ்வின் முக்கியமான தருணங்கள் அத்தனையிலும் நான் (மட்டுமே) உடன் இருந்தேன் என அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்க, அவன் மரணத்திற்குப் பிறகே, அவனுடைய அத்தனை நண்பர்களுக்கும் இதே நம்பிக்கையை தந்து சென்றிருக்கிறான் என்பதை லேசான கோபத்துடன் அறிந்து கொண்டேன்.
முத்துக்குமார் பயணங்களின் காதலன். நான் எங்கு சென்றாலும் அவனுக்குச் சொல்லிவிட்டே செல்லவேண்டும் என்பது எங்களுக்குள் எழுதப்படாத ஒரு விதி. நாங்கள் இருவரும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காரில் சுற்றித் திரிந்தோம்.
அண்ணே! அப்படியே அதோ அந்த பம்புசெட் இறைக்குதே! அந்த வயலருகே வண்டியை நிறுத்துங்க என்று சொல்வான். இறங்கிப் போய் காலை நீரில் அலசியபடி அவன் சொல்ல நானோ, வேறொருவரோ அதை அப்படியே ஒரு தாளில் எழுதிய பாடல்கள் பின்னாட்களில் தமிழர்களின் தேசியகீதமான வரலாறு ஏராளம்.
நா.முத்துகுமார் ஒரு சாப்பாட்டுப் பிரியனும் கூட. மதிய உணவை நிறைவாக அவன் உண்பதைப் பார்க்க எனக்கு மனம் நிறைந்து போகும். ஆனால், அந்த உணவுக்கு அவன் இடும் திட்டங்கள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியையும் சோதித்துப் பார்த்து விடும்.
அண்ணே! இப்ப புறப்பட்டா மதியம் ஆற்காடு ஸ்டார் பிரியாணி. ராத்திரி சேலத்துலே தலைக்கறி. மறுநாள் ஈரோட்டிலே இட்லி,கறி குழம்பு. மதியம் கோயம்புத்தூர் அங்கண்ணன் போயிடலாம். அப்படியே சாலக்குடி போயிட்டு அன்னைக்கே திரும்ப வந்துரணும். கேரளாவுலே அரிசி மொத்தமா இருக்கும் பாருங்க! அது நமக்கு ஒத்துக்காது என்று என்னையும் இணைத்துக்கொள்வான். என்னதான் நண்பர்கள் அவன் திட்டத்தைக் கெடுக்க முயற்சி செய்தாலும், அவன் சொன்ன வரிசைப்படி காரியத்தை முடித்து விடுவான்.
முத்துக்குமார் ஒரு மீன்குழம்பு வெறியன். அதிலும், பவா.செல்லதுரை வீட்டு மீன் குழம்பென்றால் அவனுக்கு உயிர். ஆனால், ஷைலஜாவின் பிரச்சனை மீன் வாங்கிச் சமைப்பதில் அல்ல! எந்த மீன் வாங்கணும்! அது என்ன சைஸில் இருக்கணும்! அதை எத்தனை கொதி விடணும்! எவ்வளவு புளி போடணும்! என அவன் நினைத்து நினைத்து அழைத்துக் கட்டளையிடும் அந்த ஆர்வக்கோளாறுதான் பிரச்சனை. எல்லாவற்றையும் மீறி அவனுக்கென்றால் மட்டும் அவன் விரும்பிய சுவையில் மீன்குழம்பு அமைந்து விடுவது எப்படி? என்று இன்றுவரை ஷைலஜா வியந்துகொண்டிருக்கிறார்!
நாங்கள் இருவரும் ஏராளமாக வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றியிருக்கிறோம். மொழியே அறியாத ஊரில் கூட, வாழையிலைச்சோறு சாம்பார்,ரசத்துடன் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வதில் முத்துக்குமாரை விஞ்சி ஒருவரை நான் பார்த்ததில்லை.
முத்துக்குமார் தன்னை ஒருபோதும் ஒரு பாடலாசிரியனாக உணர்ந்ததேயில்லை. அவனுக்குள் உயிர்ப்புடன் எப்போதும் இருந்தது ஒரு உதவி இயக்குநர்தான். அது அவன் குரு பாலுமகேந்திரா அவனை வடிவமைத்த முனைப்பில் இருந்து வந்தது. நாங்கள் எந்தத் திரைப்படத்துக்குப் போய் வந்தாலும், வரும் போதே அப்போது பார்த்த திரைப்படத்தின் இன்னொரு திரைக்கதை வெர்ஷனை என்னிடம் சொல்லுவான். அப்போது, அவன் கண்கள் தனது வழக்கமான இயக்குநர் கனவில் மூழ்கிப் போய்விடும்.
இரண்டு திரைக்கதைகளை தயாராக வைத்திருந்த முத்துக்குமார், மூன்றாவது திரைக்கதையை எழுத உத்தேசித்தது தான் இருபது ஆண்டுகள் கழித்து எழுதி இயக்கப் போகும் திரைப்படம் குறித்துதான். அதிலுள்ள சுவாரஸ்யமான பின்னணி, அந்தப் படத்தின் கதாநாயகன் இப்போது பள்ளிக்குச் செல்லும் அவன் மகன் ஆதவன் நாகராஜன்.
எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில் நா.முத்துக்குமாரை மிஞ்சிய ஒரு பாசக்கார தகப்பனை நான் கண்டதில்லை. அது வெறுமனே பாசம் மட்டுமல்ல! மகன் மீதான வெறி. தாயில்லாமல் வளர்ந்து, தகப்பனை விட்டு விலகியே வளர்ந்த தனக்கு கிட்டாத மொத்தப் பாசத்தையும் தன் மகன் மீது கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி.
முதல் தேசிய விருதுப் பாடலான ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எழுதி விட்டு என்னை தொலைபேசியில் அழைத்து வரிவரியாகப் படித்துக் காட்டினான். எனக்கு பெரும் வியப்பு!
என்னடா தம்பி! பொண்ணு பிறக்காமலேயே, மகளைப் பற்றி இத்தனை அழகாய் எழுதி விட்டாய்? பெண் குழந்தை ஆசை வந்துருச்சா? என்றேன்.
ஆமாண்ணே! ஒரு பெண்ணும் வீட்டுக்கு வந்துட்டா என் வாழ்க்கை நிறைவடைஞ்சுரும்ணே! என்றான்.
அவனுக்கு அடுத்து பிறந்தது பெண் குழந்தை.
நா. முத்துக்குமார் பெற்ற இரண்டாவது தேசிய விருது பற்றிய ரகசியம் ஒன்றினை நான் அறிவேன். முத்துக்குமார் உயிருடன் இருந்திருந்தால் நான் சொல்லியிருக்கப் போகாத அந்த சுவாரஸ்யமான நிகழ்வை அவன் குணத்தினை உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதற்காக சொல்லப் போகிறேன்.
நான் எழுதிய புத்தகத்தை எங்கள் மதிப்புமிகு இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் தருவதற்காக, அவரிடம் நேரம் கேட்டுப் பெற்றிருந்தேன். புறப்படும்போது மிகச் சரியாக அங்கு வந்த முத்துக்குமார் தானும் வருவதாக உடன் வந்தான்.
என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு உடன் முத்துக்குமாரையும் கண்டதில் பெரும் மகிழ்ச்சி. வாங்கடா! என்ன ஜோடியா வந்துருக்கீங்க? என்றார்.
எனது புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவர், முத்துக்குமாரை நோக்கி, ஒரு பாட்டு கேட்டேண்டா! நம்ம பாடகர் உண்ணிகிருஷ்ணனோட மகள் பாடியதாம்! என்ன ஒரு குரல்! என்ன ஒரு பாட்டு அது! என்று வியந்தார்.
முத்துக்குமார் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. நான் அந்தப் பாட்டைக் கேட்டிராததால் நானும் மையமாக புன்னகைத்து வைத்தேன். அன்று இரவு இயக்குநர் டெல்லி செல்லப் போவதாகச் சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தார்.
வெளியே காரில் நா. முத்துக்குமார் என்னிடம், அண்ணே! டைரக்டர் சொன்ன பாட்டு இருக்கே! அது நான் எழுதியதுதான் என்று தன்னிடம் இருந்த சிடியை தந்தான். காரில் போட்டு மீண்டும், மீண்டும் கேட்டோம். அழகே! அழகே! எனும் அந்தப் பாடல் அத்தனை அற்புதமாக இருந்தது.
பின்னே ஏண்டா அந்தப் பாட்டை நீதான் எழுதியதுன்னு டைரக்டரிடம் சொல்லலை? என்றேன்.
அவர் எதற்காக டெல்லி செல்கிறார் தெரியுமா? இந்த வருஷம் தேசிய விருதுகளுக்கு அவர்தான் தலைமை ஜூரி. ஒருவேளை இந்தப் பாட்டு ஃபைனலுக்கு வந்தா நான் அவார்டுக்காக ஏற்கனவே ப்ரஷர் கொடுத்தேன்னு அவர் நினைக்கக்கூடாது இல்லையா? என்றான்.
அந்த நிமிஷத்தில் அவனோட அற்புதமான குணத்தைக் கண்ட நான் நெகிழ்ந்து போனேன்.
இத்துடன் அந்தச் சம்பவம் நிறைவடையவில்லை.
மறுநாள் மாலை 8 மணியளவில் டில்லியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா என்னை அழைத்தார்.
சொல்லுங்க சார்! என்றேன்.
ஏண்டா! நான் சொன்ன பாட்டை முத்துக்குமார்தான் எழுதினான்னு எனக்கு நீயாவது சொல்லியிருக்கலாம்லே!
எனக்கே வெளியே வந்தப்புறம்தான் தெரியும் சார்.
என்ன புள்ளைங்கடா நீங்கல்லாம்! சரி! எனக்கு இன்னொரு வேலை பாக்கியிருக்கு. அப்புறம் பேசறேன் என்று போனை வைத்தார்.
அதற்கு மேல், ஜே.என்.யூவில் இருந்து ஒரு தமிழ் ப்ரஃபஸரை வழவழைத்து, அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து அந்த நள்ளிரவில் மீண்டும் ஒருமுறை ஜூரிகளை அழைத்து கூட்டம் போட்டு, அதை அவரே வாசித்திருக்கிறார்.
இப்படியாக, ‘மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூடத்தான் அழகு?’ எனும் அந்த முதல் பல்லவியிலேயே நா.முத்துக்குமார் தனது இரண்டாவது தேசிய விருதை அந்த நள்ளிரவில் பெற்றான்.
அவன் பெற்ற அந்த இரண்டாவது தேசிய விருதுக்கான பெருமையில் ஒரு பகுதி நமது மதிப்பிற்குரிய இயக்குநர் பாரதிராஜாவுக்கும் சேரும் என்பதை நாங்கள் எப்போதும் நன்றியுடன் பேசிக்கொள்வோம்.
நா.முத்துக்குமார் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் திரையுலகிற்கு இன்னும் பத்து தேசிய விருதுகள் கிடைத்திருக்கும்.
அவன் இன்னமும் வாழ்ந்திருந்தால், இலக்கியத்திற்கு ‘சில்க் சிட்டி’ என்ற தலைப்பில் காஞ்சிபுரம் குறித்த அற்புதமான ஒரு நாவல் கிடைத்திருக்கும்.
இன்றுவரை அவன் இருந்திருந்தால், அவன் குழந்தைகளுக்கு உலகின் ஆகச்சிறந்த தகப்பன் கிடைத்திருப்பான்.
எனக்கும் இன்றுவரையிலும் ஒரு தம்பி இருந்திருப்பான்.
– எஸ்கேபி.கருணா