ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.
எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.