தாமிரா

சில ஆண்டுகளுக்கு முன் எனது ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ புத்தகத்துக்கு ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நெல்லை ஜானகிராம் ஹோட்டலில் நடைபெற்றது.

பவாவும், ஷைலஜாவும் (பதிப்பாளர் எனும் முறையில்) ஒருங்கிணைத்த நிகழ்வு என்பதால் அவர்கள் நட்பின்பாற்பட்டு நெல்லையின் பெருமைமிகு எழுத்தாளர்கள் அனைவருமே வந்து, மேடையையும், பார்வையாளர் வரிசையையும் நிரப்பி இருந்தனர்.

நிகழ்ச்சியை விடுங்க. அது வேற சப்ஜக்ட். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் அருகில் வந்தவரை, பவா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கருணா.. இவர்தான் தாமிரா. எழுத்தாளர், இயக்குநர். எனது நண்பர்.

நீங்கதான் எஸ்கேபி கருணா சாரா? வண்ணதாசன் அண்ணாச்சி பேசியதை கேட்டேன். அண்ணாச்சி கிட்டே இவ்ளோ பாராட்டு வாங்குறது பெரிய விஷயம்தான் என்றார் தாமிரா.

அடுத்த பத்து நிமிடங்களிலேயே இறுக்கமான நட்பு அது.

நாளைக்கு நீங்க எல்லோரும் மதிய சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வந்துரணும் பார்த்துக்கோங்க என சொல்லிட்டு பதில் எதிர்பாராமல் புறப்பட்டு போயிட்டார்.

பவாவின் உலகப் புகழ் பெற்ற நேர மேலாண்மையால் மறுநாள் பகல் 11 மணிக்குப் போக வேண்டிய நாங்கள் மதியம் 2 மணிக்கு தாமிராவின் வீட்டுக்குச் சென்றோம். நெல்லையை விட்டு தள்ளி ஒரு கிராமத்தில் இருந்தது வீடு.

போகும்போதே செம பசி. வெளியே அமர்ந்து காய் வெட்டிகிட்டு இருந்த தாமிரா, வந்துட்டீங்களா? என்றபடி உள்ளே எட்டிப் பார்த்து ஏம்மா? உலையை வை என்றவுடன் திக்கென ஆயிடுச்சு.

என்னங்க? இப்போதான் உலையேவா? பசிக்குதுங்க என்றான் இளங்கோ.

அட இருங்க சார். அதென்ன 10 நிமிஷ வேலை. அப்பாவும் வந்துரட்டும்.

அப்பா வந்தார். சைக்கிளோ, டி.வி.எஸ்.50யோ, நடந்தோ.. அது நினைவில்லை. ஆனால் அவரோட கம்பீரத்தைப் பார்த்தால், அவர் தேரில் வந்து இறங்கினார் என்றிருந்தால் நீங்கள் நம்பியிருப்பீர்கள்.

எங்களுக்கு தாமிராவை விட அவரோட அப்பாவை மிகப் பிடித்துப் போயிட்டார். பவாவும், அவரும் அதே கணத்தில் நெருங்கிய நண்பர்கள் ஆகிட்டாங்க. சக விவசாயியாக, சக குடியானவனாக, சக கோழி வளர்ப்பவர்களாக, சக மானாவாரி பயிர் காதலர்களாக.. அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள ஏராள விஷயங்கள் இருந்தன.

முட்டிவரை ஏற்றிக் கட்டிய லுங்கி, ஒரு முண்டா பனியன், உடலெங்கும் வெள்ளை முடி, உழைத்தக் கரங்கள், உறுதியான உடல் என சற்றேறக்குறைய பம்பாய் படத்தில் செங்கல் சூளை வைக்கும் ராஜா கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்தினார்.

மணி 3:30 போல இலை போட்டார்கள். நாங்கள் தரையில் அமர்ந்து கொள்ள, தாமிராவே பரிமாறினார்.

சுட சுட நெய் சோறு.

பாய் வீடு என்பதால் பிரியாணியை மனசு எதிர்பார்த்து இருந்தது.

பிரியாணி இல்லையா? இளங்கோ கேட்டே விட்டான். அவன் மனசுலே எதுவும் தங்காது.

நீங்க இதை சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க என்றார் சற்றே தள்ளி சாய்வு நாற்காலியில் அமர்ந்து விசிறிக் கொண்டிருந்த தாமிராவின் அப்பா.

நெய் சோற்றின் மீது, சூடான ஆட்டுக்கறி குழம்பை ஊற்றினார்கள். அதை பிசைந்து வாயில் வைத்த கணம் ஆண்டு, தேதி, நேரம் அனைத்தையும் கடந்து ஒரு ருசியாக வாழ்நாளெல்லாம் நினைவில் உறைந்து இருக்கும்.

நாங்கள் அள்ளி அள்ளி சாப்பிட்ட வேகத்தையும், ஆவேசத்தையும் கண்ட தாமிராவின் வீட்டுப் பெண்கள் இது மட்டுந்தான் உங்களுக்கு., வேற கறி, கூட்டு எதுவும் இல்லை என சிரித்தனர்.

அது எதுக்கு? பிரியாணியை விட ருசியான சாப்பாட்டை இப்பதான் நான் சாப்பிடுறேன் என்றேன்.

எல்லாம் முடிந்து புறப்படும்போது, புது விவசாயி பவாவுக்கு, மூத்த விவசாயி ஒரு பூசணிக்காயை தந்தார்.

பின்னாளில், சில நிகழ்ச்சிகளில் தாமிராவை சந்தித்த போதெல்லாம்,

ஊர்லே அப்பா எப்படி இருக்கார்?

அந்த நெய் சோறு, கறிக்குழம்பு மறுபடியும்கிடைக்குமா?

இந்த இரண்டு கேள்விகளைதான் கேட்பேன்.

அப்பாவை பார்க்கணும்னா நீங்க தின்னவேலி போகணும்.

நெய்சோறுன்னா இப்பவே வீட்டுக்கு வந்தா கூட போதும். இங்கதான் இருக்காங்க என்பார்.

இப்போது தாமிரா நம்முடன் இல்லை.

மிகச் சிறந்த வாசகர், எழுத்தாளர், படைப்பாளி., எல்லாவற்றையும் விட அற்புதமான முற்போக்குச் சிந்தனையாளர். இந்தக் காலக்கட்டத்தில் சமூகத்தில் மிகவும் அரிதான, மிக மிக தேவையான ஒன்றான, சுயசிந்தனையாளரை வெகு விரைவில் தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

தாமிராவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அந்த வீட்டுக்குச் செல்ல இருக்கிறது. நண்பர்கள் பலரையும் உடனிருக்க முடியாமல் வெகு தொலைவில் தள்ளி வைத்திருக்கிறது காலம்.

தாமிராவின் அப்பா இப்போதும் நெல்லை கிராமத்து வீட்டில்தான் உள்ளாராம்!

தனது பிள்ளையின் உடலைக் காண்பதை விட ஒரு தகப்பனுக்கு வேறென்ன பெரிய வேதனை இருக்க முடியும்?

வாழ்நாளெல்லாம் கடும் சோதனைகளைக் கடந்து வந்த விவசாயி அவர். இந்தச் சோதனையும் கடந்து வரும் வலிமையை எல்லாம் வல்ல இறை அவருக்கு அருளட்டும்.

தாமிரா, இனி நம் நினைவுகளில் வாழ்வார்.

-எஸ்கேபி. கருணா